Thursday, December 5, 2019

பொறுப்பற்ற கல்வி இணைய தளங்கள்...

எப்போது விழித்துக்கொள்ளும் நமது ஆசிரியப் பேரினம்!


 ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்பட்டு வந்த ஒரு சில கல்வி இணைய தளங்கள் இன்று காணாமல் போய் விட்டன. தினம் ஒரு புது கல்வி தளம் சில ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.  ஒரு சில தளங்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள கையேடுகள்,வழிகாட்டிகள், காணொளிகள், கோப்புகளை பகிர்ந்து உதவி வருவதை வாழ்த்தும் அதே வேளையில் சில கல்வி இணைய சேவைத்தளங்களும் , ஊடகங்களும்  கல்வி தொடர்பான செய்திகளை விட ஆதரமற்ற செவி வழி செய்திகளையும் அதனோடு  இணைத்து பரப்பி விடுகின்றனர். அதன் உண்மைத்தன்மையை கூட ஆராய்வதில்லை. இவற்றை நம்பி நாமும் பலருக்கும் பகிர்ந்து விடுகிறோம்.

*உதாரணமாக* காலை/மாலை 15 நிமிடம் உடற்பயிற்சி  என்பது உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டுமே என ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தும் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்குமான அறிவிப்பு போல செய்திகளை பரப்பினர்.

அதே போல பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தனது துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருச்சி மண்டல பயிற்சி இயக்குநர் மற்றும் குறிப்பிட்ட பணியாளர் பயிற்சி / தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு குறிப்பானை மூலம் 50 வயது அல்லது 30 ஆண்டுகள் பணி முடித்தோர் விபரங்களை  கேட்டு நினைவூட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. . இதற்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
ஆனால் இந்த உத்தரவு. ஆசிரியர்களுக்கும் தமிழகம் முழுமையும் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்குமானது போல இந்த கல்வி செய்தித் தளங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிந்து வருகின்றன.

இவர்களின் முந்திரிக்கொட்டை செயலை நம்பி நமது ஆசிரியர்களும் அதன் உண்மையை ஆராயாமல் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு வேளை அரசுக்கே இந்த யோசனை இல்லாமல் இருந்தாலும் நாமே எடுத்துக் கொடுத்து  அரசை செய்யச்சொல்லி தூண்டுவது  போல உள்ளது.

எப்போது நாம் விழித்துக் கொள்ளப்போகிறோம்?

No comments:

Post a Comment

back to top

Back To Top