Monday, October 21, 2019

பிளாஸ்டிக்: அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு அபராதம்

போபால் : மாவட்ட கலெக்டரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, தடை செய்யப்பட்ட
பாலிதீன் பையில் எடுத்து வந்த அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு கலெக்டர் ரூ.1000 அபராதம் விதித்துள்ளார்.மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்ட கலெக்டராக இருப்பவர் சோட்டி சிங். பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 57 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், வனத்துறையினருடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழாவை நடத்தினர். மாவட்ட கல்வி அதிகாரி, டிஎப்ஓ ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சோட்டி சிங் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினரை வரவேற்பதற்காக வாங்கி வந்த மாலையை, பள்ளி தலைமையாசிரியரான பி.எஸ்.சவுகான், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்தார்.


இதனால் கோபமடைந்த கலெக்டர், தலையாசிரியரை கடிந்து கொண்டதுடன் அதே இடத்தில் ரூ.1000 அபராதம் விதித்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது பற்றி கலெக்டர் கூறுகையில், மாலையை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்ததுடன், விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆனது. நூற்றுக் கணக்கான மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என்பதற்காகவே அபராதம் விதித்தேன். அதே இடத்தில் அவரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது என்றார்.இது பற்றி தலைமையாசிரியர் சவுகான் கூறுகையில், இந்த விழாவை நடத்தியது, வனத்துறை.

விழாவிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தான் செய்தனர். பாலிதீன் பைகளில் மாலைகள் வாங்கி வந்ததற்காகவே அபராதம் விதிக்கப்பட்டது. எங்கள் பள்ளி வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வகையில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தானே பொறுப்பு என்பதால் அபராதம் விதித்ததாக கலெக்டரும் என்னிடம் கூறினார் என்றார்.

No comments:

Post a Comment

back to top

Back To Top