திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
குறள் : 998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
பொருள்:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்
பழமொழி :
A diamond is valuable, though it lies on a dunghill.
குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் குறையுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.
2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்
பொன்மொழி :
நம்பிக்கை தான் வாழ்க்கை
ஆனால் ஒருவரின்
ஏமாற்றத்திற்கு முக்கிய
காரணமும் இந்த
நம்பிக்கை தான்..!
பொது அறிவு :
1.அதிக ஞாபக சக்தி உள்ள விலங்கு எது?
யானை.
2. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?
அண்டார்டிகா.
English words & meanings :
grat·i·fy - to please or satisfy one's desire, verb. திருப்திப்படுத்த, வினைச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
NMMS Q 34:
ஒளி உமிழ் டையோடு என்பது _________பொருட்களால் செய்யப்பட்டது.
விடை: குறை கடத்தி
ஜூலை 28
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]
உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
உலகக் கல்லீரல் அழற்சி நாள்
உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது
நீதிக்கதை
தூக்கணாங்குருவி
ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,
குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.
வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.
பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
இன்றைய செய்திகள்
28.07.22
★செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் மருத்துவ சேவை வழங்க 30 ஆம்புலன்ஸ் மற்றும் 1000 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
★தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
★காய்ச்சல், இதய பாதிப்புக்கான 26 மருந்துகள் தரமற்றவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
★5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது - அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
★பிலிப்பைன்ஸில் நேற்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
★2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
★செஸ் ஒலிம்பியாட் போட்டி: 6 அணிகளை களம் இறக்கும் இந்தியா.
★காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் வீரராக பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Today's Headlines
Prepared by
Covai women ICT_போதிமரம்
from Covai Women ICT https://ift.tt/Bl3aWfQ
No comments:
Post a Comment