அதிகாரிகள் எனும் மாமியார்களே...
பள்ளிகளில்
தரமான துணி கொடுக்க துப்பில்லை
தரமற்ற
செருப்பை
தட்டிக் கேட்க
நாதியில்லை
அரைகுறை
கிரேயான்ஸை
சரிசெய்ய
நேரமில்லை
நெளிகின்ற
ஜாமின்றி பாக்ஸை
நிமிர்த்தி வைக்க
நெஞ்சுரமில்லை
அஸைன்மென்ட் கேட்கும் வேகம்
குறிப்பேடுகளை வழங்குவதில் இல்லை
ஆன்லைனில் காட்டும்
அக்கறையை
மாணவர்க்கு புத்தகத்தை பெற்றுத்
தருவதில் இல்லை
மெமோ கொடுப்பதில்
காட்டும் வேகம்
பணிப்பலன், பணப்பலன்
பெற்றுத்தருவதில்
இல்லை
ஆசிரியர்களை
கண்டபடி
வசைபாடும்
உயர் (அழுத்த) அதிகாரிகளே !
மாணவர் சேர்க்கை
அதிகரிக்கச் சொல்லும் நீங்கள்தான்
மூலை முடுக்கெல்லாம்
தனியார் பள்ளிகளை
துவங்குவதற்கு
துணை
போனவர்கள்
மாணவர்களிடம்
கண்டிப்பை தவிர்த்து
அன்பாய் மட்டும்
பேசுங்கள் என்று
எங்களை வழிகாட்டும்
நீங்கள்
எங்களை மட்டும்
பிரஷர் மாத்திரை
சாப்பிடும்
அளவிற்கு
திட்டிதீர்ப்பது ஏன்?
ஆன்லைன்கல்வி தொடங்கி
செயலிவரை உங்கள்
கல்விப் பிரமாதம்
பெரிய மலைப்பு
எவ்வளவு புதுமைகள்
எத்தனை திட்டமிடல்கள்
எத்தனை மாற்றங்கள்
அசைன்மென்ட், ஆன்லைன் கல்வி
இன்னபிற
எண்ணிலடங்கா முறை
பெருங் கல்வியாளர்களின்
பெருத்த சிந்தனைகள்
அளவில்லா மதிப்பீடுகள்
விரட்டும் அதிகாரிகள்
மாநில ஆய்வுகள்
எத்தனை வேகம்
எவ்வளவு துல்லியம்
அடடா சிலிர்க்கிறது
நினைக்க நினைக்க
செம்மாந்த
உங்கள்துறை
வளர்ச்சி
மேதகு
கல்விப்புலிகளே
முதலில்
புள்ளிவிவரங்களை
தூக்கி வீசுங்கள்
வந்து
பள்ளி நிலவரங்களை
அலசுங்கள்
உங்கள் சந்தேக
கண்களை
அறிவால் முதலில்
கழுவுங்கள்
ஒவ்வோர் ஆசிரியனும்
படும்துயர் உணருங்கள்
ஊருக்கு இளைத்தவனாகி
எவன் வேணுமாலும்
அதட்டி மிரட்டும்
குருக்களின்
துயர்களை
முதலில் மனங்கொண்டு
உணருங்கள்
மாணவன் மனம்நோக
நடவாதீர் என
எங்களுக்கு
வகுப்பெடுக்கும்
அதிபுத்திசாலிகளே
எங்களின் மனக்குமுறல்கள்
உங்கள் மனங்கீறவில்லையா?
முதலில் உங்கள்
அறிவுக்கூர்மையை
சுயபரிசோதனை
செய்யுங்கள்
மனிதமற்று நிற்கிற
மழலைகளுக்கு
இக்காலத் தேவை
எதென்பதை தீர்க்கமாய்
தீர்மானியுங்கள
சொல்லிக்கொடுக்கும்
எங்களுக்கே
சொல்லிக் கொடுப்பதை
மூட்டை கட்டி விட்டு
மனிதம் சார்ந்த
கல்வியை
முன்னெடுங்கள்
வகுப்பறை சுதந்திரமாய்
செயல்பட விரும்பும்
நீங்கள் தான்
குருக்களின் கைகளில்
விலங்கிட்டே
வைத்திருக்கிறீர்கள்
இது
எங்கள் ஒட்டுமொத்த
மௌனத்தின்
முதல்குரல்
எழுத்தறிவித்தவன்
இறைவனென்று..
அவனுக்குப்
படையலிடுதலே
வழக்கம்
அவனையே
பலியிடுதலா
இக்கால வழக்கம்??
தெளியட்டும் குழப்பம்.
ஆசானின்
அவசியமுணருங்கள்
நாளை முதலேனும்
நற்பூக்கள் பூக்க
புதுவிதி எழுதுங்கள்..
ஒவ்வொரு
கிராமத்திற்கும்
தகுந்தவாறு
தங்களையே
மாற்றிக்கொண்டு
கல்வி போதிக்கும்
ஆசிரியர்களைப்
புரிந்துகொண்டு
ஊக்கப்படுத்தும்
அதிகாரிகளை
ஆவலுடன்
எதிர்பார்த்து
காத்திருக்கும்
ஆசிரியர்களில்
நானும் ஒருவன்...
தோழமையுடன்
சீனி. சந்திரசேகரன்
No comments:
Post a Comment