ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவது குறித்து புகார் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை !!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உதவிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாக படிப்பதில் பல சிரமங்கள் உள்ளதால் பள்ளிகள் கட்டாயம் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி முறையாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்ததால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் இருந்தே நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வந்தால் உடல்நலன் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தினசரி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் விலக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஆசிரியர்களை தினமும் வேலைக்கு வர உத்தரவிட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள் மட்டும் இவ்வாறு புகார் அளிப்பது சரி இல்லாத ஒன்றாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். சுழற்சி முறையில் மட்டும் பள்ளிக்கு வருவோம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப்படியெனில் சுழற்சி முறையில் வரும் நாட்களுக்கு மட்டுமே சம்பளத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
பகிர்வு வழி: daily tamilnadu
No comments:
Post a Comment