Tuesday, June 15, 2021

மக்களே..உஷார்.. உணவக பார்சல்கள் மூலம் கொரானா..

 


உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போதும், பேப்பர்களைப் பிரிக்கவும் எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிடத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேப்பர்களைப் பிரிக்க எச்சிலையும், கவர்களைத் திறக்க ஊதவும் செய்வதால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கொரோனா தொற்று பாதித்த ஒருவரால் நூறு பேருக்குப் பரவும் அபாயம் உள்ளது. உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது எச்சில் அல்லது ஊதுவதால் அது உணவுப் பொருட்களில் பாதிப்பு ஏற்படும்" எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, நல்ல யோசனையைத் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்புக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்கள் பார்சல் செய்யும்போது பேப்பர்களைப் பிரிக்க எச்சில் பயன்படுத்தக் கூடாது, கவர்களைத் திறக்க ஊதக் கூடாது, ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், இது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Source: Tamil express news

No comments:

Post a Comment

back to top

Back To Top