படுக்கையிலிருந்தே ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் குழந்தைகள்: விளைவுகளைத் தவிர்க்கும் வழிகள்..
கொரோனா பேரலை காரணமாக கடந்த ஒன்றரை வருடமாகவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. இருப்பினும் அனைத்து பள்ளியுமே இணைய வழியில் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், குழந்தைகள் ஆன்லைன் கல்வியில் எந்தளவுக்கு ஈடுப்பாட்டோடு இருக்கின்றனர் என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டன.
அதில் '22 சதவிகித குழந்தைகள், படுக்கையிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கின்றனர்' என்றும்; '14 சதவிகித குழந்தைகள்தான் தரையில் அமர்ந்தபடி பாடம் கவனிக்கின்றனர்' என்றும் தெரியவந்துள்ளது. வருடக்கணக்கில் இப்படி மோசமான உடல்வாகில் அமர்ந்து வகுப்புகளை கவனிப்பதாலும் படிப்பதாலும், பல குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு உள்ளாவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுக்க 350 பள்ளிக்குழந்தைகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், 3 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோரிடமிருந்தும் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 மணி நேரம் மொபைல் உபயோகிப்பது தெரியவந்துள்ளது. இது, பள்ளிகள் திறக்கப்பட்டிருந்த நேரத்தை விடவும் 2 – 3 மணி நேரம் அதிகமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் குழந்தைகளுக்கு பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளில், 52 சதவிகித குழந்தைகள், அன்றாடம் ஆன்லைன் வகுப்புகளையும், 36 சதவிகித குழந்தைகள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமும் ஆன்லைன் வகுப்புகள் அட்டெண்ட் செய்வது உறுதியாகியுள்ளது.
ஆன்லைன் வகுப்பின் காரணமாக 41 சதவிகித குழந்தைகளுக்கு, கண் வலி ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் பேசுகையில், “ஆன்லைன் வகுப்புக்கு வரும் 53 % குழந்தைகள், அந்த நாளின் இறுதியில் அந்த வகுப்பினால் சோர்ந்துவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் கல்விகற்கும் சூழல். பெற்றோரும் ஆசிரியரும் அவற்றை மேம்படுத்த வேண்டியது, மிக மிக அவசியம்” எனக்கூறியுள்ளார்.
இதுபற்றி சென்னையை சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் வசந்த் நம்மிடையே பேசினார்.
“பள்ளி செல்லாமல் இணைய வழியில் கல்வி கற்கும் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு, கடந்த ஓராண்டாக எவ்வித நேர வரைமுறையும் இல்லாமல் இருக்கிறது. காலை 9.30 க்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கும் என்றால், பெரும்பாலான பிள்ளைகள் 9.25 க்குதான் படுக்கையிலிருந்தே எழுகின்றனர். இரவும்கூட, நேரம் கழித்தே தூங்குகின்றனர். இடையே, உணவும் நேர வரைமுறையின்றியே எடுத்துக்கொள்கின்றனர். இந்த நேரவரைமுறை சரியாக அமையாததுதான், பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம். இதை சரிசெய்ய, பெற்றோரால்தான் முடியும்.
எப்படி குழந்தை பள்ளி சென்றால் அவர்கள் காலை 7 மணிக்கு எழுவார்களோ, அதேபோல இப்போதும் எழவைக்கப்பட வேண்டும். எழுந்து – குளித்து – சாப்பிட்டு விட்டுதான் அவர்கள் ஆன்லைன் க்ளாஸை அட்டெண்ட் செய்ய வேண்டும். இது பெற்றோரின் கடமைதான். பிள்ளைகளை தன்வசப்படுத்தும் கலை, பெற்றோருக்குத்தான் தெரியவேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, ஆன்லைன் வகுப்பில் ஒருவகுப்பு முடித்துவிட்டு, அடுத்த வகுப்புக்கு இடையிலான நேரத்தில், குழந்தைகளை ஏதாவது ஒரு வேலையில் பெற்றோர் ஈடுபட வைக்கவும். உடலும் மனமும் ஈடுபடும்படியான வேலையாக அது இருப்பது நல்லது. குறைந்தபட்சம், ஏதேனுமொரு விளையாட்டாக கூட அது இருக்கலாம். இதன்மூலம், அவர்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்கும்.
இவை அனைத்தையும்விட முக்கியமாக, குழந்தைகளுக்கு வீட்டிலேயே தனியாக ஒரு நாற்காலி அமைத்துக்கொடுத்து, அங்கிருந்து மட்டும்தான் அவர்கள் ஆன்லைன் க்ளாஸ் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது. க்ளாஸ் முடிந்த பின்னரே, அங்கிருந்து எழ வேண்டும் என சொல்ல வேண்டும். இப்படி செய்தால், உடல் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment