கோவை:'நம்ம பையனை கவனிச்சியா...இப்பல்லாம் எப்ப வர்றான், எப்ப போறான்னே தெரிய மாட்டேங்குது''ஆமாங்க...நானும் கவனிச்சேன். என்ன சொன்னாலும் கண்டுக்கறதே இல்லீங்க.
சரியா
சாப்பிடவே மாட்டேங்கறான். கண்ணை பார்த்தா சொருகி கிடக்கு'- பாவம்...அந்த பெற்றோருக்கு தங்கள் மகன் 'கூல் லிப்' எனப்படும் போதை வஸ்துவுக்கு, அடிமையாகி கிடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை.நண்பர்களின் தவறான துாண்டுதல், மனஅழுத்தம், போதிய அரவணைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், 'கூல் லிப்' எனும் தடை செய்யப்பட்ட போதை பொருளின் பழக்கத்தின் பிடியில், கோவையில் பல பள்ளி மாணவர்கள் சிக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.எப்போதும் பாதி மயக்க நிலைவெள்ளை நிறத்திலான இப்போதை பொருளை, உதட்டுக்கு அருகிலோ, நாக்கின் அடியிலோ வைத்து கொண்டால், சில வினாடிகளில், மந்தநிலை ஏற்பட துவங்கி விடும்.
கண்கள் சொருகிய நிலையிலே மாணவர்கள் காணப்படுவர்.வகுப்பறையில் யாரிடமும் பேசாமல், வேறு உலகில் சஞ்சரிப்பது போன்ற பிரமையில், மாணவர்கள் காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு, தனியார் பள்ளிகள் என்ற வித்தியாசம் இல்லாமல் பரவிவரும் இந்த கலாசாரத்துக்கு, சமீபகாலமாக சில பெண் குழந்தைகளும் ஆட்படுவதாக, நடமாடும் உளவியல் மைய நிபுணர் அருள்வடிவு கூறுகிறார்.அவர் கூறியதாவது:பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களிடம், இந்த கூல் லிப் போதை பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. பள்ளிகளில் நடத்தும் மாணவர் கவுன்சிலிங்கில் இது தெரியவருகிறது.நண்பர்கள் துாண்டுதலால் பயன்படுத்த தொடங்கி, பின்னாளில் இப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். ஒரு கட்டத்தில் போதையின் அளவு, போதாத நிலை வரும்போது, கஞ்சா, அபின் போன்ற அடுத்தகட்ட போதை வஸ்துக்களை நாடத் துவங்கி விடுவர். இவர்களை, 'காக்னடிவ் பிஹேவியர் தெரபி' (நடத்தை மாற்ற சிகிச்சை) மூலம் மீட்டெடுக்கலாம்.அடையாளம் காண்பது எப்படி?பிள்ளைகளின் நடத்தையை, பெற்றோர் கண்காணிப்பது அவசியம்.
இதை பயன்படுத்தும் மாணவர்கள், உதடுகள் சிவந்த நிலையில், கண்கள் மயங்கிய நிலையில் காணப்படுவர். சில மாணவர்களுக்கு, வாயோரம் எச்சில் கசிவதன் மூலமும், இப்பழக்கத்தில் சிக்கியிருப்பதை அறியலாம். சரியாக சாப்பிடாமல், துாங்காமல், வீட்டில் உள்ளோரிடம் எதுவும் பேசாமல் இருந்தால், அதன் காரணத்தை கண்டறிய வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது அவர்களிடம் அன்பாக பேச வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.'வாய் புற்றுநோய் உறுதி'கோவை அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் அலி சுல்தான் கூறுகையில், ''கூல் லிப் போன்ற போதை பொருட்களை, பயன்படுத்த துவங்கும் போது, வாயில் கொப்புளங்கள், புண்கள் ஏற்படும்.
தொடர்ந்து பயன்படுத்தினால், வாய் புற்றுநோய் ஏற்படுவது உறுதி. இதோடு, பல், உதடு, தாடை சார்ந்த தசைகள் இறுகி விடும். இதனால், நாளடைவில் வாய் திறக்க முடியாமல் போகலாம். வாய், உணவு குழாயில் மட்டுமல்ல, நரம்பியல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும்,'' என்றார்.போதை பழக்கம் ஏன் ஏற்படுகிறது?தற்போதைய அவசர உலகில், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில், குழந்தை பராமரிப்பும், வழிகாட்டுதலும் இல்லை. பாடங்களுக்கு தவறாமல், டியூஷன் அனுப்புவதில் அக்கறை கொள்ளும் பலர், அவர்களின் பதின்பருவ மாற்றங்கள், பழக்கவழக்க மாறுபாடுகளை கண்காணிக்க தவறி விடுகின்றனர். இதனால், டீன் ஏஜ் துவக்கத்திலேயே, சில நண்பர்களின் தவறான வழிகாட்டுதலால், போதை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது.
நன்றி - தினமலர்