Tuesday, September 17, 2019

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வியாளர்கள் சொல்வது என்ன?


தமிழக அரசு அறிவித்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, கல்வித்தரத்தை உயர்த்தாது எனக் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, கல்வி வணிகமயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது எனக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாகவே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பே, தமிழக அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் ஓவியம், விளையாட்டு, எழுத்து என ஏதாவது ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க வேண்டும். ஆனால், அந்தத் திறமைகளைக் கண்டறியாமல் எல்லா வகுப்புகளுக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகத்தான் இருக்கும். அவர்களின் திறமை வெளிப்படாது.

தேர்வின் மூலம் மட்டுமே தரமான மாணவர்களை உருவாக்க முடியாது. 5-ம் வகுப்பு மாணவனால் 10-ம் வகுப்பு பாடங்களை கற்க முடியாது. ஒரே வகுப்பில் மீண்டும் மீண்டும் படிக்கும் மாணவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகும். அடுத்த ஆண்டு மீண்டும் அதே வகுப்பில் படிக்க மாட்டார்கள். எனவே, எல்லா வகுப்புக்குமான பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, ஒருபோதும் கல்வித்தரத்தை முன்னேற்றாது" என்றார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் தே.முருகன், "புதிய கல்விக் கொள்கையிலேயே 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பரிந்துரையில் உள்ளது. அதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு செய்கிறது. இந்தத் தேர்வு முறையால் கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவர். தற்போது கட்டாயத் தேர்ச்சியால் பெரும்பாலும் இடைநிற்றல் இல்லை. ஆனால், இந்த நிலை இனி மாறும். தேர்ச்சிபெறாத மாணவர்களை, அவர்களது பெற்றோர் வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவர் அல்லது உறவினர்கள் ஏதாவது வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவர். இது குலக்கல்வி திட்டத்துக்கே வழிவகுக்கும்.

தற்போது குறைந்தபட்சம் பள்ளிப் படிப்பையாவது முடித்தபின்பே, பெண்களுக்குத் திருமணம் நடத்துகின்றனர். இனி தேர்வில் தோல்வியடையும் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கும். சிந்தனையற்ற சமுதாயத்தைத்தான் இந்தத் திட்டம் உருவாக்கும்" என்றார் தெளிவாக.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் சுந்தர், "தேர்வு மூலமாகத்தான் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்பதை எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. இதுவரை, கட்டாயத் தேர்ச்சியால்தான் மாணவர்களின் இடைநிற்றல் வெகுவாகக் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், அவர்கள் பெறும் மதிப்பெண்களும் ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் வயதுக்கேற்ற வகுப்பு என்ற ஓர் அம்சம் உள்ளது. ஆனால் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பால் அந்த அம்சம் காலியாகிவிடும். 7 அல்லது 8-ம் வகுப்பு படிக்க வேண்டிய 12 அல்லது 13 வயது மாணவன் 5-ம் வகுப்பே படிக்கும் நிலை ஏற்படும். தன் வயதுக்கேற்ற வகுப்பில் படிக்க முடியாது. இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரான ஒன்று. சிறுவயதிலேயே மாணவர்களை வேலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுதான் இது. மாணவர்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

நற்பண்புகள் கொண்ட நல்ல குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏதோ ஒரு நிறுவனத்துக்காகக் கூலித் தொழிலாளர்களை மட்டுமே அரசு உற்பத்தி செய்ய நினைக்கிறது. ஒரு மாணவன் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நன்றாகப் படிக்க முடியும். பின்லாந்து மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அங்கே கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. அங்கே சென்று வந்த அமைச்சர் தேர்வுகளை ரத்துசெய்திருந்தால் நன்றாக இருக்கும். அதற்கெதிரான முடிவை எடுத்துள்ளார். இது கல்வியில் நாம் பெற்றுள்ள வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும். குழந்தைகளுக்கு மனஅழுத்தமே உருவாகும். அறிவியல்பூர்வமற்ற இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும்" என்றார்.
மாணவர்களின் நலன்சார்ந்து சிந்திக்கும் கல்வியாளர்கள் ஒவ்வொருவரும் பொதுத்தேர்வுக்கு எதிராகக் கருத்துக் கூற, அரசோ எந்தக் கருத்தையும் கேட்காமலேயே புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

back to top

Back To Top